ஆண்டின் பொதுக்காலம் 23ஆம் வாரம்

செப்டம்பர் 11, 2026 வெள்ளி

முதல் வாசகம் : திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 9: 16-19,22-27

சகோதரர் சகோதரிகளே, நான் நற்செய்தியை அறிவிக்கிறேன் என்றாலும் அதில் நான் பெருமைப்பட ஒன்றுமில்லை. இதைச் செய்யவேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது. நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு! இதை நானாக விரும்பிச் செய்தால் எனக்குக் கைம்மாறு உண்டு. நானாக விரும்பாவிட்டாலும் இது என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்பாக இருக்கிறது. அப்படியானால், எனக்குக் கைம்மாறு என்ன? உங்களுக்கு எச்செலவுமின்றி நற்செய்தியை அறிவிப்பதிலுள்ள மனநிறைவே அக்கைம்மாறு; நான் நற்செய்தி அறிவிப்போருக்குரிய உரிமையைக் கொஞ்சம் கூடப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. நான் யாருக்கும் அடிமையாய் இல்லாதிருந்தும் பலரைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர என்னை எல்லாருக்கும் அடிமையாக்கிக் கொண்டேன். வலுவற்றவர்களைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர வலுவற்றவர்களுக்கு வலுவற்றவன் ஆனேன். எப்படியாவது ஒருசிலரையேனும் மீட்கும்படி நான் எல்லாருக்கும் எல்லாம் ஆனேன். நற்செய்தியால் வரும் ஆசியில் பங்குபெற வேண்டி நற்செய்திக்காக எல்லாவற்றையும் செய்கிறேன். பந்தயத் திடலில் ஓட வந்திருப்போர் பலர் ஓடினாலும் பரிசு பெறுபவர் ஒருவரே. இது உங்களுக்குத் தெரியாதா? எனவே, பரிசு பெறுவதற்காகவே நீங்களும் ஓடுங்கள். பந்தயத்தில் போட்டியிடுவோர் யாவரும் அழிவுறும் வெற்றி வாகை சூடுவதற்காகத் தன்னடக்கப் பயிற்சிகளில் ஈடுபடுவர். நாமோ அழிவற்ற வெற்றிவாகை சூடுவதற்காக இப்படிச் செய்கிறோம். நான் குறிக்கோள் இன்றி ஓடுபவரைப் போல ஓடமாட்டேன். காற்றைக் குத்துபவரைப் போலக் குத்துச்சண்டை இடமாட்டேன். பிறருக்கு நற்செய்தியை அறிவிக்கிற நானே தகுதியற்றவனாக மாறிவிடாதவாறு என் உடலை அடக்கிக் கட்டுப்படுத்துகிறேன்.

ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல் : திபா 84: 2. 3. 4-5. 11
பல்லவி: படைகளின் ஆண்டவரே! உமது உறைவிடம் எத்துணை அருமையானது!

2 என் ஆன்மா ஆண்டவரின் கோவில் முற்றங்களுக்காக ஏங்கித் தவிக்கின்றது;
என் உள்ளமும் உடலும் என்றுமுள இறைவனை மகிழ்ச்சியுடன் பாடுகின்றது.

பல்லவி: படைகளின் ஆண்டவரே! உமது உறைவிடம் எத்துணை அருமையானது!


3 படைகளின் ஆண்டவரே! என் அரசரே! என் கடவுளே!
உமது பீடங்களில் அடைக்கலான் குருவிக்கு வீடு கிடைத்துள்ளது;
தங்கள் குஞ்சுகளை வைத்திருப்பதற்குச் சிட்டுக் குருவிகளுக்குக் கூடும் கிடைத்துள்ளது.

பல்லவி: படைகளின் ஆண்டவரே! உமது உறைவிடம் எத்துணை அருமையானது!


4 உமது இல்லத்தில் தங்கியிருப்போர் நற்பேறுபெற்றோர்;
அவர்கள் எந்நாளும் உம்மைப் புகழ்ந்து கொண்டேயிருப்பார்கள்.
5 உம்மிடமிருந்து வலிமை பெற்ற மானிடர் பேறுபெற்றோர்.
அவர்களது உள்ளம் சீயோனுக்குச் செல்லும் நெடுஞ்சாலைகளை நோக்கியே உள்ளது.

பல்லவி: படைகளின் ஆண்டவரே! உமது உறைவிடம் எத்துணை அருமையானது!


11 கடவுளாகிய ஆண்டவர் நமக்குக் கதிரவனும் கேடயமுமாய் இருக்கின்றார்;
ஆண்டவர் அருளையும் மேன்மையையும் அளிப்பார்;
மாசற்றவர்களாய் நடப்பவர்களுக்கு நன்மையானவற்றை வழங்குவார்.

பல்லவி: படைகளின் ஆண்டவரே! உமது உறைவிடம் எத்துணை அருமையானது!


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! உமது வார்த்தையே உண்மை. உண்மையினால் அவர்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம் : ✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 39-42

அக்காலத்தில் இயேசு அவர்களுக்கு உவமையாகக் கூறியது: “பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவருக்கு வழிகாட்ட இயலுமா? இருவரும் குழியில் விழுவரல்லவா? சீடர் குருவை விட மேலானவர் அல்ல. ஆனால் தேர்ச்சி பெற்ற எவரும் தம் குருவைப் போல் இருப்பர். நீங்கள் உங்கள் கண்ணில் இருக்கும் மரக் கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பைக் கூர்ந்து கவனிப்பதேன்? உங்கள் கண்ணில் இருக்கும் மரக் கட்டையையே நீங்கள் பார்க்காமல் இருந்துகொண்டு உங்கள் சகோதரர் அல்லது சகோதரியிடம், `உம் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்கட்டுமா?’ என்று எப்படிக் கேட்க முடியும்? வெளிவேடக்காரரே, முதலில் உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையை எடுத்து எறியுங்கள். அதன்பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய்க் கண் தெரியும்.”

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


ஆண்டின் பொதுக்காலம் 23ஆம் வாரம்

செப்டம்பர் 12, 2026 சனி

முதல் வாசகம் : திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 10: 14-22

என் அன்பிற்குரியவர்களே, சிலைவழிபாட்டைவிட்டு விலகுங்கள். உங்களை அறிவாளிகள் என மதித்துப் பேசுகிறேன். நான் சொல்வதைக் குறித்து நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். கடவுளைப் போற்றித் திருவிருந்துக் கிண்ணத்திலிருந்து பருகுகிறோமே, அது கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்கு கொள்ளுதல் அல்லவா! அப்பத்தைப் பிட்டு உண்ணுகிறோமே, அது கிறிஸ்துவின் உடலில் பங்குகொள்ளுதல் அல்லவா! அப்பம் ஒன்றே. ஆதலால் நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம். ஏனெனில் நாம் அனைவரும் அந்த ஒரே அப்பத்தில்தான் பங்கு கொள்கிறோம். இஸ்ரயேல் மக்களின் சடங்கு முறைகளைப் பாருங்கள். பலிப் பொருள்களை உண்கிறவர்கள் பலிக்குப் படைக்கப்பட்ட பலிபீடம் குறிக்கும் கடவுளோடு உறவு கொள்ளவில்லையா? எனவே சிலைகளுக்குப் படைக்கப்பட்டவற்றை அல்லது சிலைகளைப் பொருட்படுத்த வேண்டும் என்றா சொல்லுகிறேன்? மாறாக, சிலைகளுக்குப் பலியிடப்பட்டவை கடவுளுக்கு அல்ல, பேய்களுக்கே பலியிடப்பட்டவையாகும். நீங்கள் பேய்களோடு உறவு கொள்வதை நான் விரும்பவில்லை. நீங்கள் ஆண்டவரு டைய கிண்ணத்திலும் பேய்களுடைய கிண்ணத்திலும் பருக முடியாது. நீங்கள் ஆண்டவரின் பந்தியிலும் பேய்களின் பந்தியிலும் பங்குகொள்ள முடியாது. நாம் ஆண்டவருக்கு எரிச்சல் ஊட்டலாமா? நாம் அவரைவிட வலிமைமிக்கவர்களா?

ஆண்டவரின் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல் திபா116: 12-13. 17-18 (பல்லவி: 17a)
பல்லவி: நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்.

12 ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும்
நான் அவருக்கு என்ன கைம்மாறு செய்வேன்?
13 மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து,
ஆண்டவரது பெயரைத் தொழுவேன்.

பல்லவி: நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்.


17 நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்;
ஆண்டவராகிய உம் பெயரைத் தொழுவேன்;
18 இப்பொழுதே உம் மக்கள் அனைவரின் முன்னிலையில் ஆண்டவரே!
உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்.

பல்லவி: நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி யோவா 14: 23

அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம் : ✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 43-49

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: “கெட்ட கனி தரும் நல்ல மரமுமில்லை; நல்ல கனி தரும் கெட்ட மரமுமில்லை. ஒவ்வொரு மரமும் அதனதன் கனியாலே அறியப்படும். ஏனென்றால் முட்செடிகளில் அத்திப் பழங்களைப் பறிப்பாருமில்லை; முட்புதர்களில் திராட்சைக் குலைகளை அறுத்துச் சேர்ப்பாருமில்லை. நல்லவர் தம் உள்ளமாகிய நல்ல கருவூலத்திலிருந்து நல்லவற்றை எடுத்துக் கொடுப்பர். தீயவரோ தீயதினின்று தீயவற்றை எடுத்துக் கொடுப்பர். உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும். நான் சொல்பவற்றைச் செய்யாது என்னை, `ஆண்டவரே, ஆண்டவரே’ என ஏன் கூப்பிடுகிறீர்கள்? என்னிடம் வந்து, என் வார்த்தைகளைக் கேட்டு, அவற்றின்படி செயல்படும் எவரும் யாருக்கு ஒப்பாவார் என உங்களுக்கு எடுத்துக்காட்டுகிறேன். அவர் ஆழமாய்த் தோண்டி, பாறையின்மீது அடித்தளம் அமைத்து, வீடு கட்டிய ஒருவருக்கு ஒப்பாவார். வெள்ளம் ஆறாகப் பெருக்கெடுத்து அந்த வீட்டின்மேல் மோதியும் அதை அசைக்க முடியவில்லை; ஏனென்றால் அது நன்றாகக் கட்டப்பட்டிருந்தது. நான் சொல்வதைக் கேட்டும் அதன்படி செயல்படாதவரோ, அடித்தளம் இல்லாமல் மண்மீது வீடு கட்டியவருக்கு ஒப்பாவார். ஆறு பெருக்கெடுத்து அதன்மேல் மோதிய உடனே அது விழுந்தது; அவ்வீட்டுக்குப் பேரழிவு ஏற்பட்டது.”

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.