ஆண்டின் பொதுக்காலம் 32ஆம் வாரம்
நவம்பர் 16, 2024 சனி
முதல் வாசகம் : திருத்தூதர் யோவான் எழுதிய மூன்றாம் திருமுகத்திலிருந்து வாசகம் 5-8
அன்பார்ந்தவரே, நீர் சகோதரர்களுக்கு, அதுவும் அறிமுகமில்லாச் சகோதரர்களுக்குச் செய்தவற்றையெல்லாம் பார்க்கும்போது நீர் நம்பிக்கைக்கு உரியவர் என்பது தெளிவாகிறது. அவர்கள் திருச்சபையின் முன்னிலையில் உமது அன்பைக் குறித்துச் சான்று பகர்ந்தார்கள். எனவே நீர் அவர்களைக் கடவுளுக்கு உகந்த முறையில் வழியனுப்பி வைத்தால் நல்லது. ஏனெனில் அவர்கள் கிறிஸ்துவுக்காகப் பயணம் மேற்கொண்டவர்கள். பிற மக்களிடமிருந்து அவர்கள் வழியில் எதையும் பெற்றுக் கொள்ளவில்லை. இத்தகையோருக்கு உதவுவது நமது கடமை. இவ்வாறு, உண்மைக்காக உழைக்கும் அவர்களின் உடன் உழைப்பாளர் ஆகிறோம்.
ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல் : திபா 112: 1-2. 3-4. 5-6
பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்.
1 ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்;
அவர்தம் கட்டளைகளில் அவர்கள் பெருமகிழ்வு அடைவர்.
2 அவர்களது வழிமரபு பூவுலகில் வலிமைமிக்கதாய் இருக்கும்;
நேர்மையுள்ளோரின் தலைமுறை ஆசிபெறும்.
பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்.
3 சொத்தும் செல்வமும் அவர்களது இல்லத்தில் தங்கும்;
அவர்களது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்.
4 இருளில் ஒளியென அவர்கள் நேர்மையுள்ளவரிடையே மிளிர்வர்;
அருளும் இரக்கமும் நீதியும் உள்ளோராய் இருப்பர்.
பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்.
5 மனமிரங்கிக் கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்;
அவர்கள் தம் அலுவல்களில் நீதியுடன் செயல்படுவர்.
6 எந்நாளும் அவர்கள் அசைவுறார்;
நேர்மையுள்ளோர் மக்கள் மனத்தில் என்றும் வாழ்வர்.
பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மாட்சியை நீங்கள் அடையும் பொருட்டே, நாங்கள் அறிவித்த நற்செய்தியின் வழியாக அவர் உங்களை அழைத்தார். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம் : ✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 1-8
அக்காலத்தில் மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதற்கு இயேசு ஓர் உவமை சொன்னார். “ஒரு நகரில் நடுவர் ஒருவர் இருந்தார். அவர் கடவுளுக்கு அஞ்சி நடப்பதில்லை; மக்களையும் மதிப்பதில்லை. அந்நகரில் கைம்பெண் ஒருவரும் இருந்தார். அவர் நடுவரிடம் போய், `என் எதிரியைத் தண்டித்து எனக்கு நீதி வழங்கும்’ என்று கேட்டுக் கொண்டேயிருந்தார். நடுவரோ, நெடுங்காலமாய் எதுவும் செய்ய விரும்பவில்லை. பின்பு அவர், `நான் கடவுளுக்கு அஞ்சுவதில்லை; மக்களையும் மதிப்பதில்லை. என்றாலும் இக்கைம்பெண் எனக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டிருப்பதால் நான் இவருக்கு நீதி வழங்குவேன். இல்லையானால் இவர் என் உயிரை வாங்கிக்கொண்டேயிருப்பார்’ என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார்.” பின் ஆண்டவர் அவர்களிடம், “நேர்மையற்ற நடுவரே இப்படிச் சொன்னார் என்றால், தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணை செய்யக் காலம் தாழ்த்துவாரா? விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஆயினும் மானிடமகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ?” என்றார்.
கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
ஆண்டின் பொதுக்காலம் 33ஆம் வாரம்
முதல் வாசகம் : இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 12: 1-3
அக்காலத்தில் உன் இனத்தார்க்குத் தலைமைக் காவலரான மிக்கேல் எழும்புவார். மக்களினம் தோன்றியது முதல் அக்காலம் வரை இருந்திராத துன்ப காலம் வரும். அக்காலத்தில் உன் இனத்தார் விடுவிக்கப்படுவர். நூலில் யார் யார் பெயர் எழுதப்பட்டுள்ளதோ, அவர்கள் அனைவரும் மீட்கப்படுவார்கள். இறந்துபோய் மண்புழுதியில் உறங்குகிற அனைவருள் பலர் விழித்தெழுவர் அவருள் சிலர் முடிவில்லா வாழ்வு பெறுவர் வேறு சிலரோ வெட்கத்திற்கும் முடிவில்லா இழிவுக்கும் உள்ளாவர். ஞானிகள் வானத்தின் பேரொளியைப் போலவும், பலரை நல்வழிக்குக் கொணர்ந்தவர் விண்மீன்களைப் போலவும், என்றென்றும் முடிவில்லாக் காலத்திற்கும் ஒளிவீசித் திகழ்வர்.
ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல் : திபா 16: 5,8. 9-10. 11
பல்லவி: இறைவா, என்னைக் காத்தருளும் உம்மிடம் அடைக்கலம் புகுந்துள்ளேன்.
5 ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து அவரே என் கிண்ணம் எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே
8 ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்
அவர் என் வலப் பக்கம் உள்ளார் எனவே, நான் அசைவுறேன்.
பல்லவி: இறைவா, என்னைக் காத்தருளும் உம்மிடம் அடைக்கலம் புகுந்துள்ளேன்.
9 என் இதயம் அக்களிக்கின்றது என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது
என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும்.
10 ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்புவிக்க மாட்டீர்
உம் அன்பனைப் படுகுழியைக் காண விடமாட்டீர்.
பல்லவி: இறைவா, என்னைக் காத்தருளும் உம்மிடம் அடைக்கலம் புகுந்துள்ளேன்.
11 வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்
உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு
உமது வலப் பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு.
பல்லவி: இறைவா, என்னைக் காத்தருளும் உம்மிடம் அடைக்கலம் புகுந்துள்ளேன்.
இரண்டாம் வாசகம் : எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 10: 11-14,18
சகோதரர் சகோதரிகளே, ஒவ்வொரு குருவும் நாள்தோறும் இறை ஊழியம் புரியும்போது மீண்டும் மீண்டும் அதே பலிகளைச் செலுத்தி வருகிறார். அவையோ பாவங்களை ஒருபோதும் போக்க இயலாதவை. ஆனால், இவர் ஒரே பலியைப் பாவங்களுக்காக என்றென்றைக்கும் எனச் செலுத்திவிட்டு, கடவுளின் வலப் பக்கத்தில் அமர்ந்துள்ளார். அங்கே தம் பகைவர் தமக்குக் கால்மணை ஆக்கப்படும்வரை காத்திருக்கிறார். தாம் தூயவராக்கியவர்களை ஒரே பலியினால் என்றென்றைக்கும் நிறைவுள்ளவராக்கினார். எனவே பாவ மன்னிப்புக் கிடைத்தபின் பாவத்திற்குக் கழுவாயாகச் செலுத்தும் பலிக்கு இடமே இல்லை.
ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா!
மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கு எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்.
அல்லேலூயா.
நற்செய்தி வாசகம் : ✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 24-32
அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: அந்நாள்களில் வேதனைகளுக்குப் பிறகு கதிரவன் இருண்டு விடும் நிலா ஒளி கொடாது. விண்மீன்கள் வானத்திலிருந்து விழுந்த வண்ணமிருக்கும் வான்வெளிக் கோள்கள் அதிரும். அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதைக் காண்பார்கள்.
பின்பு அவர் வானதூதரை அனுப்பி, அவர்கள் மண்ணுலகில் ஒரு கோடியிலிருந்து விண்ணுலகில் மறு கோடிவரை நான்கு திசைகளிலிருந்தும் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பார். அத்திமரத்திலிருந்து ஓர் உண்மையைக் கற்றுக் கொள்ளுங்கள். அதன் கிளைகள் தளிர்த்து இலைகள் தோன்றும்போது கோடைக் காலம் நெருங்கி வந்துவிட்டது என நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள். அவ்வாறே இவை நிகழ்வதைக் காணும்போது மானிடமகன் கதவை நெருங்கி வந்துவிட்டார் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள். இவையனைத்தும் நிகழும்வரை இத்தலைமுறை ஒழிந்து போகாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும் ஆனால் என் வார்த்தைகள் ஒழியவேமாட்டா. ஆனால் அந்த நாளையும் வேளையையும் பற்றித் தந்தைக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது விண்ணகத்திலுள்ள தூதருக்கோ மகனுக்கோ கூடத் தெரியாது.
கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.