புனித அந்தோணியார் ஆலய தல வரலாறு
1987ஆம் ஆண்டு சித்தாலப்பாக்கம் என்ற இவ்வூரில் கத்தோலிக்க ஆலயம் ஏதுமில்லை. ஏழு கத்தோலிக்க குடும்பங்கள் இங்கு வசித்தனர். வழிபட ஆலயம் ஏதுமில்லாததால், மேடவாக்கத்தைச் சேர்ந்த திரு. அலெக்ஸ் மற்றும் திரு. போஸ்கோ அருளானந்தம் இருவரும் சென்று மகாலட்சுமி நகர், புனித சூசையப்பர் ஆலய பங்குத் தந்தை அருட்பணி தேவசையா அவர்களிடம் முறையிட்டனர். அவர் சித்தாலப்பாக்கத்தில் சிற்றாலயம் எழுப்ப ஒப்புதல்
கொடுத்தார். வழிபாட்டிற்கு சிற்றாலயம் எழுப்ப திருமதி லிஸி பாய் அவர்களால் நிலம் தானமாக வழங்கப்பட்டது.மறைந்த திரு. போஸ்கோ அருளானந்தம் அவர்கள் அதில் ஓர் சிறிய ஓலை கொட்டகை அமைத்து ஞாயிறு திருப்பலி நடைபெற பெருமுயற்சி எடுத்தார். அருட்பணி. சிரியாக் இலி முட்டில் அவர்கள் நமக்கு ஞாயிறு திருப்பலியினை நிறைவேற்றுவார். 1987ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆகஸ்டு 15ஆம் நாளை நமது ஆலய திரு விழா முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது.
இச்சிற்றாலயம் மகாலட்சுமி நகர், புனித சூசையப்பர் ஆலயத்தின் கிளை பங்காக திகழ்ந்து வந்தது. பெருமழையின் காரணமாக நமது சிற்றாலயத்தின் கூரை சரிந்து சேதமாகியதால்,மறைந்த திரு. போஸ்கோ அருளானந்தம் அவர்களின் இல்லத்தில் திருப்பலி நடைபெற்றது.மீண்டும் சிற்றாலயம் புதுப்பிக்கப்பட்டு 1996ஆம் ஆண்டு தூய கார்மெல் துறவற சபையினரின் நிர்வாகப் பொறுப்பில் மாடம்பாக்கம், வளன் நகரிலுள்ள திரு இருதய ஆண்டவர் ஆலயத்தின் கிளைப்பங்காக மாற்றப்பட்ட பின்பு பொறுப்பாளர் தந்தையாக அருட்பணி. வென்ஸஸ்லாஸ் மற்றும் உதவி பங்குத் தந்தையாக அருட்பணி. இருதயசாமி ஆகியோர் 1996 முதல் 1999 வரை மக்களை ஆன்மீக வழியில் நடத்திச் சென்றனர்.1999 முதல் 2000 வரை அருட்பணி. ஆரோக்கியநாதன் அவர்களும் 2000 முதல் 2002 வரை அருட்பணி. பெலிக்ஸ் மதுரம் அவர்களும், 2002 முதல் 2008 வரை அருட்பணி.கிறிஸ்துதாஸ் அவர்களும் இச்சிற்றாலயத்தின் பங்குத் தந்தையர்களாகவும் உதவிப் பங்குத் தந்தையாக அருட்பணி. இராபர்ட் அவர்களும் நியமிக்கப்பட்டு இறைமக்களை ஆன்மீக வழியில் நடத்திச் சென்றனர். இக்காலக்கட்டத்தில் பங்குத்தந்தையின் முயற்சியால் பல பக்த சபைகள் தொடங்கப்பட்டன.
பின்னைய நாளில் கத்தோலிக்க கிறிஸ்தவ குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்த
நிலையில், அனைவருடைய முயற்சியாலும் புதிய ஆலயம் கட்டுவதற்கான முயற்சி எடுக்கப்பட்டு
12.06.2005-ல் மேதகு ஆயர் நீதிநாதன் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்கிடையில் 10.02.2007ஆம் ஆண்டில் ஒட்டியம்பாக்கம் பகுதியில் தூய இடைவிடா சகாய அன்னையின் பெயரில் மற்றொரு சிற்றாலயம் உதயமானது.மேலும், அருட்பணி. கிறிஸ்துதாஸ், அருட்பணி. ஆரோக்கிய டேவிட்ராஜ், அருட்பணி.ஆனந்தராஜ், அருட்பணி. ஜோசப் இவர்களின் பணிக்காலங்களில் (2007-2011) புதிய புனித அந்தோணியார் ஆலயம் 06.03.2011ல் மேதகு ஆண்டகை டாக்டர் நீதிநாதன் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
2011 முதல் 2013 வரை அருட்பணி. திவ்யானந்தம், பங்குத்தந்தையாகவும் உதவிப் பங்குத்தந்தையர்களாக அருட்பணி. வின்சென்ட் மற்றும் அருட்பணி. ஜே. பால் ஆன்டனி ஆகியோரும் நியமிக்கப்பட்டனர். அருட்பணி. ஜே. பால் ஆன்டனி அவர்கள் தூய அந்தோணியார்
ஆலயப் பொறுப்பாளராகவும் அருட்பணி. வின்சென்ட் அவர்கள் தூய இடைவிடா சகாய அன்னைஆலய பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டு மக்களை ஆன்மீக வழியில் நடத்திச் சென்றனர். மேலும் தூய அந்தோணியார் ஆலயத்தில், புதிதாக கொடி மரம் நிறுவப்பட்டு, தூய அந்தோணியார் திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்பட்டது.
02.06.2013 அன்று புனித அந்தோணியார் ஆலயம், செங்கை மறைமாவட்டத்தின் தனி
பங்காக உயர்த்தப்பட்டு, பங்கின் முதல் பங்குத் தந்தையாக அருட்பணி. ஜார்ஜ் விக்டர் அவர்கள் நியமிக்கப்பட்டார்.இவ்வாலயம் தனிப்பங்காக உயர்த்தப்பட்ட பின்பு ஆன்மீகம், சமூக அக்கறை, மனிதநேயம்,இயற்கையின்பால் பொறுப்பு போன்ற பல்வேறு பரிமாணங்களில் வளர்ந்து வருவது, இறைவனின் தனிப்பெரும் இரக்கமும் பராமரிப்பும், உடனிருப்பும் ஆகும்.13.07.2014 அன்று தாழம்பூரில் துன்பமுடிச்சுகளை அவிழ்க்கும் அன்னை சிற்றாலயம் உருவானதும், 14.08.2016 அன்று பெரும்பாக்கத்தில் தூய அற்புத ஆரோக்கிய அன்னை ஆலயம் உருவானதும், இறைவன் இந்தப் பங்கை அளவுக்கு அதிகமாய் அன்பு செய்கிறார் என்பதற்கான தனிப்பெரும் சான்றாய் விளங்குகிறது.
1987ஆம் ஆண்டில் 7 கத்தோலிக்க குடும்பங்களைக் கொண்டு துளிர்விட்ட புனித அந்தோணியார் ஆலயம் என்ற அரும்பு, 2017ஆம் ஆண்டில் 30 ஆண்டுகளை நிறைவு செய்து 350க்கும் மேற்பட்ட குடும்பங்களை தனக்கு சொந்தமாக்கிக் கொண்டு ஒரு ஆலமரமாய் வளர்ந்து நிற்கிறது. இந்த முத்தான முப்பது ஆண்டுகளில் முடிவில்லா இறைவனின் இரக்கத்தை பெற்றுக்கொண்டதன் வெளி அடையாளம் தான் 04.06.2014 அன்று புனிதப்படுத்தப்பட்ட இந்த வானுயர்ந்த கோபுரம்.இந்த கோபுரம் தனது கரங்களை குவித்து நன்றி சொல்வது போல் இந்த ங்குஇறை சமூகமும் 30 ஆண்டளவாய் பெற்றுக் கொண்ட ஆசீர்வாதங்களுக்கு நன்றி சொல்கிறது.